Total Pageviews

Thursday, September 17, 2015

இளம்துறவியும் கசாப்புகடைக்காரனும்





முப்பது ஆண்டுகளுக்கு முன்பு குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சர் புத்தகங்களாக தேடி வாசித்துக்கொண்டிருந்தேன் . அவைகளிலா அல்லது குரு விவேகானந்தர் எழுதிய ராஜயோக விளக்கவுரையிலா என்று தெரியவில்லை

கர்மயோகத்தின் மேன்மைகளைப்பற்றிய புரிதல் அப்பியாசம் இல்லாமல் ராஜயோகம் கைகூடாது என்பதற்கும் முழுமையை அடைய முடியாது என்பதற்கும் இக்கதையை குருதேவர் ராமகிருஷ்ணர் கூறியதாகவே நினைவில் உள்ளது .இது யார் கூறியது  என்பதையும் விட இக்கதையின் பாடம் நமக்கு மிக முக்கியம்

கதை வருமாறு :

ஒரு புகழ் பெற்ற குருவின் குருகுலத்தில் குருவுக்கு பிரியமான சீடன் ஒருவன் இருந்தான் . அவன் 2௦ ஆண்டுகளுக்கும் அதிகமாக குருவுக்கு மனப்பூர்வமாக அடிபணிந்து அனுக்கத்தொண்டுகள் பல செய்து ஆச்சாரங்களிலும் கல்வி கேள்விகளிலும் அப்பியாசங்களிலும் பிரமச்சாரியத்திலும் தேர்ந்து தலைமைச்சீடன் என்பதான தகுதிகள் அடைந்திருந்தான் .குருவும் தனக்கடுத்த பல பொறுப்புகளை மெல்ல அவன் வசம் ஒப்படைத்திருந்ததே அவன்தான் தலைமைச்சீடன் என்பதான கருத்தை பலருக்கும் உண்டாக்கியிருந்தது

இந்த நிலையில் சீடன் குருவிடம் மிகவும் தயங்கி தயங்கி ஒரு விண்ணப்பம் வைத்தான் ,

குருவே . தாங்கள் அனுமதித்தால் இவ்விண்ணப்பத்தை  சமர்பிக்கிறேன் . தங்களை குருவாக அடைந்ததும் தங்களுக்கு சேவை செய்வதும் தங்களை அடுத்து ஞானத்தை பெறுவதும் எனது முற்பிறவி புண்ணியமாகும் .. ஆசையை அறவே அறுத்து விட்டு சேவை செய்வது ஒன்றே முழுமையடையும் வழி என்பதை பொறுமையோடும் சிரத்தையோடும் தங்களிடம் கற்றிருக்கிறேன்

இப்போது ஒரு சின்ன ஆசை . நமது குருகுலம் சீடர்களால் நிரம்பி வழிக்கிறது . ஆனாலும் தொலைதூரத்தில் உள்ளவர்களால் இங்கு வர இயலவில்லை . அடியேனை தொலைதூரத்தில் தனியாக குருகுலம் தொடங்க அனுமத்தித்தால்  நானும் குரு என்ற ஸ்தானத்தில் அப்பகுதியில் பலரை மேன்மையடைய செய்யமுடியும் .

நல்லது பல ஆண்டுகளாக எனக்கு பிரியமான சீடனாக இருக்கிறாய் . குருவாகும் தகுதியும் உனக்கு இருக்கிறது . ஆனாலும் பிரம்மாச்சாரியும் சந்நியாசியுமான என்னிடம் கிடைக்காத ஒரு கல்வி நான் கொடுக்கும் முகவரியில் உள்ளவரிடம் ஒரு இரண்டு ஆண்டுகள் நீ கற்றுக்கொண்டால் தனியாக குருகுலம் தாரளமாக தொடங்கலாம் . அவரிடம் சென்று நான் அனுப்பியதாக கூறி அவர் இட்ட வேலையை செய்து பயிற்சி பெற்று வருவாயாக என ஒரு முகவரிக்கு கடுதாசி ஒன்றையும் வழிசெலவும் கொடுத்து அனுப்பி வைத்தார்

சீடன் பயணம் செய்து அம்முகவரியை அடைந்தபோது அவனுக்கு பகீரென்றது . அங்கு ஒரு கசாப்புக்கடை இருந்தது . அதில் கசாப்பை ஒருவர் கூறு போட்டு விற்றுகொண்டிருந்தார்

சந்தேகம் அடைந்தவனாக முகவரியை இரண்டு மூன்று பேரிடம் விசாரித்தபோது அது அந்த நபரே என்றும் சொல்லிவிட்டனர்

பல ஆண்டுகள் பிரமச்சாரியத்திலும் சந்நியாசத்திலும் அப்பியாசம் உள்ள நான் இந்த கசாப்புகடைக்காரனிடமா பயிற்சி பெறுவது . ஒருவேளை இவரோடு தொடர்புள்ள மகான் ஒருவர் இருக்ககூடும் . இவர் மூலமாக அவரிடம் சேர குரு முகவரி கொடுத்திருக்கலாமோ ? சரி எதற்கும் அவரிடமே இந்த கடுதாசியை கொடுத்து விசாரிப்போம்

கடுதாசியை வாங்கி பார்த்த கசாப்புகடைக்காரர் உள்ளே வரச்சொல்லி அமரச்சொன்னார் . குருவின் பெயரை ஒரு நண்பர் போல சொல்லி அனுப்பிவிட்டாரா எனக்கேட்டார் . சரி இங்கிருந்து கூட மாட வேலை செய்யுங்கள் என்றார் .

சீடன் ரெம்ப நொந்துபோனான் . ஆனாலும் குரு இட்ட கட்டளையை சிரத்தையோடு செய்வதை கற்றிருந்த அவன் அதை தள்ளுவதற்கு இயலாது என்பதால் அரைமனதோடு தலையாட்டினான் .

வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் அவரிடம் உள்ளார்ந்த அன்போடு பேசுவதும் ; தங்கள் பிரச்சினைகளை அவரிடம் பகிர்ந்துகொள்வதும் அவர் பொறுமையாக கேட்டுக்கொள்வதும் கொஞ்சம் வித்தியாசமாக சீடனுக்கு தெரிந்தது

விற்பனை முடிந்ததும் இருவரும் வீட்டுக்கு சென்றபோது தனது மனைவியிடம் இன்னார் நம்மிடம் இவரை வேலைக்கு அனுப்பியதாக சொல்லி தங்க ஏற்பாடுகள் செய்தார் . அங்கு அவர் தாய்தகப்பனுக்கு சேவை செய்வதும் பிள்ளைகளுக்கு போஷிப்பதும் உற்றார் உறவினர் களோடு உறவுகளை பேணுவதும் மாலை கோவிலுக்கு தவறாது சென்று பிரார்த்திப்பதும் ஆன அன்றாட நிகழ்வுகள் அனைத்தையும் கவனித்த சீடனுக்கு இல்லறவாசியின் அன்றாட வாழ்விலும் கர்மயோகம் வெளிப்படுவதை கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்தான் .அவனுக்கு காலபோக்கில் தனது குருவிடம் மரியாதை உண்டாகிவிட்டது .

அவர் அதிகமாக பேசுவதில்லையானாலும் தெளிவுகள் கேட்டால் ஆழ்ந்த வார்த்தைகள் கடவுள் நம்பிக்கை கடவுளிடம் சரணாகதி இருப்பதை கண்டான் .

பிறகு ஏன் இந்த தொழில் செய்கிறீர்கள் என்றால் தனது முன்னோர்களின் மூலமாக இந்த தொழில் வாய்த்தது . இறைவனால் வாய்த்த தொழிலை தொழிலுக்காக செய்கிறேன் . அதை அவராகத்தான் மாற்றித்தரவேண்டுமே ஒழிய அதை நாமாக மாற்றுவது சரியாகாது .  இந்த தொழிலை இங்கிருந்து சென்றவுடன் என் மனதிலிருந்தும் விடுவித்துக்கொள்கிறேன் என்றார் .

கீதை 18: 45 தன்னியல்பாகவே தன்னை வந்து பற்றும் கர்மங்களை – தொழிலை உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் லயித்து செய்யும் மனிதன் பூர்ணத்தை நோக்கி ஈடேற்றம் பெறுவான் . தொழிலுக்காக தொழிலை செய்து அதை நான் செய்தேன் என்ற பற்றை விடுவித்துக்கொள்கிரவன் சகல சித்திகளையும் அடைவான் என சொல்லப்பட்டுள்ளதை கேட்டுணர்வாயாக .

கீதை 18: 46 சகல படைப்புகளும் எதிலிருந்து உண்டாயினவோ சகல கர்மங்களும் எதனுடைய வியாபகமாக வெளிப்பட்டுக்கொண்டுள்ளனவோ அந்த பரமாத்மாவால் தனக்கு வழங்கப்பட்ட ஸ்தானத்தை கர்மத்தை நிறைவு செய்யும் மனிதன் ஈடேற்றம் அடைகிறான் .

கீதை 18: 47 பிறர்க்குரிய கர்மத்திற்கு உதவியாக தொண்டு செய்வதைப்பார்க்கிலும் தனக்கு வாய்த்த கர்மத்தை சிரத்தையாக செய்வது நல்லது .இயற்கையாகவே தன் மேல் வந்த தொழிலை ஒருவன் செய்தால் அதனால் அவன் பாவமடையான் .

கீதை 18: 48 குந்தியின் மகனே . இயற்கையாக தனக்கு வாய்த்த தொழில் குற்றம்குறைவுடையதே ஆயினும் அதை கைவிடலாகாது . தப்பித்து செல்லலாகாது .ஏனெனில் தீயை புகையானது எப்போதும் சூழ்ந்திருப்பதைப்போல தொழில்கள் அனைத்திலும் குற்றம்குறைகள் கலந்தே உள்ளன .

கீதை 18: 49 பற்றற்ற மனநிலையுடன் எதிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ளும் ஆத்மசொருபியானவன் விருப்புவெறுப்பு கடந்தவனாக கடவுளுக்கு ஒத்திசைந்து கர்மம் செய்து கர்மத்தளையை வெல்கிறான் .

ஒரு துறவி சகலத்திலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டேன் என்று இருப்பதைப்போல இல்லறவாசி இருக்கமுடியாது . அவனுக்கு சமுதாய கடமைகள் நிறைய உள்ளன . தான் வாழும் சமூகத்தில் தன்னைச்சுற்றிய அனைவரோடும் நல்லிணக்கமாக அவர்களோடு ஒத்து வாழ்வது அவசியம் . அவன் ஞானியே ஆயினும் ; இறைவழி இறைசித்தம் செய்கிறவனே ஆயினும் தனது தரத்தை தாழ்த்தி அனைவரோடும் ஒத்துழைத்து தனது செய்கையாலும் வாழ்வாலும் ஒரு முன்னுதாரணத்தை மட்டுமே காட்டிக்கொண்டிருக்கவேண்டும் . அனைவரையும் அவர்கள் இருக்கும் நிலையிலிருந்து ஒரு படி முன்னோக்கி இழுத்தால்மட்டுமே போதுமானது . இன்றைக்கே உச்சத்தை முழுஉண்மையை நிலைநாட்டிவிட முடியாது .

இறைவன் எதையும் படிப்படியே கொஞ்சம் கொஞ்சமாகவே பரிணாம வளர்ச்சி அடையச்செய்கிறார் . இறைவனின் வழி எப்போதும் வளர்ச்சி மார்க்கமே தவிர புரட்சி மார்க்கமல்ல .

ஆனால் இந்த ஓரத்திலிருந்து அந்த ஓரத்திற்கு தாவும் குழந்தைத்தனம் – இளம்பிள்ளைகோளாறு மனிதர்களுக்குள்ளது . அவர்கள் ஒரு விசயத்தை தெரிந்துகொண்டவுடன் இன்றைக்கே உச்சத்தை அடைந்தவர்கள்போல நடந்துகொள்கிறார்கள் .

வைத்தால் குடுமி அடிச்சால் மொட்டை என்கிற பழமொழிபோலவே ஒன்று குடுமி வைத்துக்கொள்வார்கள் அல்லது மொட்டை அடித்துவிடுவார்கள் ‘ இடைப்பட்ட தரமாக கிராப் வெட்டிக்கொள்வது காரியசித்தியானது என்பது அவர்களுக்கு தெரிவதில்லை

சுத்தவாதம் என்கிற சரக்கு பார்ப்பதற்கு தூய்மையானதுபோல தெரிந்தாலும் உண்மையில் அதுவும் ஒரு அசுரமாய்மாலமே . தப்புதவறுகள் அனைத்தையும் தைரியமாக செய்து அனுபவி என்று தூண்டி விடும் அசுர ஆவிகள்தான் கொஞ்சம் நல்லவர்களை கொஞ்சம் கூட தப்புபண்ணகூடாது ; யாரையும் செய்யவும் விடக்கூடாது என எப்போதும் அடுத்தவர்களுக்கு இடைஞ்சலாக வாழும் புரட்சிக்காரர்களாக மாற்றிவைத்துவிடுகிறது

ஆவிமண்டலத்தில் அந்த ஒரே ஆவியே ஒருவனுக்கு தப்பு மேல் தப்பு பண்ணு என தைரியம் கொடுக்கும் இன்னொருவனை யாரையும் தப்பே செய்யவிடமாட்டேன் என தூண்டி விட்டு பலருக்கு இடைஞ்சலும் கொடுக்கும்

ஆனால் காரியசித்தி என்பது அப்படியல்ல ; இருக்கிற படியிலிருந்து உண்மையை நோக்கி ஒரு படி உயர்த்திவிட்டால் போதும் என்றிருக்கும் .

மனிதனாக வந்துவிட்ட பிறகு அவதாரங்கள் செய்த காரியங்களில் கூட குற்றம்குறைகள் வராமல் இல்லை . ஆனால் ஒட்டுமொத்த நிகழ்வு பலரை இறைவனை நோக்கி உயர்த்திவைத்ததாக அவை இருக்கும் .

இருக்கிறநிலையில் அவனவன் பெரியவனே என்றொரு உபதேசம் உண்டு . இன்று சமுதாயத்தில் ஓரிடத்தில் ஒருவனை இறைவன்தான் வைத்திருக்கிறார் . அதில் நாமும் மற்றவர்களும் ஒருபடி இறைவனை நோக்கி முன்னேறினால் போதுமானது

சகலவற்றையும் இறைவன் மாற்றித்தரும்படியாக பிரார்த்தித்துக்கொண்டு இன்று நம்மேல் சுமந்த கடமைகளை விருப்புவெறுப்பின்றி இறைவனுக்காக என்ற மனநிலையுடன் முழுஈடுபாட்டோடு செய்துவரவேண்டும்

இக்கதையின் துறவியான இளம்சீடனும் அவ்வாறே கசாப்புக்கடைக்காரன் என்ற கர்மயோகியிடம் கரமயோகத்தை கற்றுத்தேர்ந்தான் என்பது குருதேவர் ராமகிரிஷ்ணரின் கதையின் சாரமாகும் .  


நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி